பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


ஆபுத்திரன் கூறிய அன்புரைகள் அந்தணர் செவியுட் புகுந்தில. அருமறை அறிந்த தமக்கு அறியாச் சிறுவன் அறிவுரை கூறுவதா என ஆத்திரம் கொண்டனர்; “ஏடா! நீ இகழ்ந்தது எம்மை அன்று; உலகைப்படைத்த உயர்ந்தோன் எமக்கு உவந்தளித்த நான்மறைகளையே நீ இகழ்ந்தனை; அருமறைகளைப் பழிப்பவர் அந்தணர் குலத்தவராகார்; நீ, அப்பசு வீன்ற மகனே அல்லது பார்பன மகன் அல்லன்” எனக்கூறிப் பழித்தனர்.

அந்தணர், தன்னை ஆமகன் எனக் கூறிப் பழிப்பது கண்டு அவர்பால் சினம் கொண்டிலன்; மாறாக அவர் அறியாமையை எண்ணி நகைத்தான்; பின்னர், அப்பார்ப்பனப் பெரியோர்களைப் பார்த்து, “நான்மறை வல்ல நல்லோர்களே! நான் மறைக்காவலர் என உங்களால் போற்றி வணங்கப்பெறும் அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேசம்பளன் என்ற இந்நால்வர் வரலாற்றினை நீங்கள் அறிவீர்கள்; அசலன், ஆ வயிற்றில் வந்தவன்; சிருங்கி, மான் வயிற்றில் பிறந்தவன். விரிஞ்சி, புலிக்குப் பிறந்தவன்; கேசகம்பளன், நரியீன்ற நல்லோன் என நூல்கள் நுவல்கின்றன. ஆவுக்கும், மானுக்கும், புலிக்கும்; நரிக்கும் பிறந்தவர்களெல்லாம் பெரு மறைத் தலைவர் எனப் போற்றப்படுவராயின், ஆவிற்குப் பிறந்த அடியேன் மட்டும் பழியுடையன் ஆவனே? ஆழச் சிந்தித்து அமைதி காணுங்கள்” எனத் தெளிவுரை தந்தான்.

ஆபுத்திரன் கூறிய அவ்வுரையை மறுக்கும் திறன் அந்தணர்க்கு இல்லாயிற்று. அறியாச் சிறுவன் ஒருவன், ஆசிரியன்மார் என்ற பாராட்டினைப் பெற்ற பெரியோர்களாய தங்களை வாயடங்கச் செய்து விட்டனனே எனச் சினந்தனர். செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டனர்.