பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

ஆருயிர் ஒம்பும் பெரியோரைக் காணின் அவர் கைப்புகுக எனக் கூறிக் கலத்தைக் குளத்தில் எறிந்தான். பின்னர் ஒரு மரத்தடியில் அமர்ந்து, உணவொழித்து, மனத்தை ஒரு வழி அடக்கியிருந்து உயிர் நீத்தான்.

மணிபல்லவத்தில் மன்னுயிர் நீத்த ஆபுத்திரன், கீழ்வானில் தோன்றிக் காரிருள் கெடுத்து, மேல்வானில் சென்று மறையும் ஞாயிறு போல், சாவக நாட்டில் பிறந்து மன்னன் மகனாய் வளர்ந்தான். சாவக நாட்டில் உள்ள தவளமால் வரையில் மண்முகன் என்னும் முனிவன் மாதவம் புரிந்து கொண்டிருந்தான். பண்டு, ஆபுத்திரன் பிறந்த அந்நாள் தொட்டு ஏழுநாள் வரையும், அவனுக்குப் பாலூட்டி வளர்த்த பசு அப்புண்ணியப் பயனாய் மண் முக முனிவன் தவச்சாலை அடைந்து ஆண்டு வாழ்ந்திருந்தது. கொம்பும் குளம்பும் பொன்னிறம் காட்டப் பெருங்கவின் பெற்று விளங்கிய அப்பசு, கன்று ஈனா முன்பே, பால் சுரந்து பல உயிர்களைப் புரந்தது. முக்கால நிகழ்ச்சிகளையும் முன்னின்றுணரவல்ல மண்முகன், அப்பசுவின் இயல்பு கண்டு, இதன் வயிற்றில், மழை மாறாது வளங்கொழிக்குமாறு மண்ணுலகாளும் மன்னவன் ஒருவன் தோன்றுவன் என அறிந்து கூறினன்.

மீண்டும் பிறந்து அறம் செய்யும் மனத்தோடு, பிணிநோய் உறாதேமாண்டு மணிபல்லவத்தீவில் மறைந்த ஆபுத்திரன், இறக்கும் அந்நிலையிலும், தனக்குப் பாலூட்டி வளர்த்த அப்பசுவை மறந்திலனாதலின், அதன் வயிற்றில் வந்து தங்கினான். வைகாசித்திங்கள் முழுநிலா நாளன்று, அவ்வா, ஒர் ஆண்மகவை ஈன்றது. வானவர் வாசநீரும் மலரும் தூவி வாழ்த்தினர்; புத்தன் பிறக்கும்