பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

வானம் வழங்குவதை மறந்திலது. மண்ணும் மரங்களும், வனம்பல நல்கின. உயிர்களை வருத்தும் பசி, பிணி, பகைகளைப் பார்ப்பது அரிதாயிற்று. இவ்வாறு நல்லாட்சி மேற்கொண்டிருந்தான் புண்ணியராசன்.

ஒருநாள் புண்ணியராசன் தன் மனைவியோடு, அரண்மனையை அடுத்திருந்த பூம்பொழிலுக்குச் சென்றான். சிறிது பொழுது பொழில்வளம் கண்டுகளித்த பின்னர் இருவரும், அப்பொழிலில் அறம் புரிந்துகொண்டிருந்த தருமசாவகன் எனும் தவ முனியைக் கண்டு அவன் அடிபணிந்து நின்றனர். அவன் உரைத்த பாவ புண்ணியங்களின் பண்பு, நிலையும் நிலையாப் பொருள் களின் இயல்பு, பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு எனும் துக்க வகைகள், பிரிந்த உயிர்செல்லுமிடத்தியற்கை; பேதைமை முதலாம் சார்புகளின் தோற்றமும் தொடர்பும், அச்சார்புகளை அறுத்தொழுகும் ஆறு, அனைத்துயிர்க்கும் ஆசிரியனாய புத்தன் இயல்பு ஆகிய அரிய பொருள்களை அமைதியாக இருந்து கேட்டனர்.

அரசனும், அவன் உரிமையும், இவ்வாறு அறங் கேட்டிருக்கும் அந்நிலையில், ஆபுத்திரன் கை அமுத சுரபியை மணிமேகலா தெய்வத்தின் துணையால் பெற்ற மணிமேகலை, அவ்வாபுத்திரன், இப்பிறவியில் இருந்து ஆளும் சாவகநாட்டையும், அதைப் புண்ணியராசன் வடிவில் இருந்தாளும் அவனையும் கண்டு மகிழ வானூடெழுந்து, தரும சாவகன் தவப்பள்ளி முன்வந்து நின்றாள். அவளைக் கண்ட அரசன், “பெண்ணிணை இல்லாப் பேரழகுடையாள்; ஆனால் இவள் கண்களில் காமக் குறிப்பு இடம் பெற்றிலது. கையில் கலம் ஏந்தியிருக்கவும், கருத்தில் அறம் கேட்கும் குறிப்புடையாள்; யார்