பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. இலக்குமி

அசோதரம் எனும் நாட்டை இரவிவன்மன் எனும் அரசன் ஆண்டிருந்தான். அவன் தலைநகர் பல்வேறு துறையிலும் பணியாற்றும் மக்கள் பெருங்கூட்டமாய் வாழும் ஒரு பேரூர். அதனால் அம்மாநகர், ஒயாது ஒலிக்கும் கடலொலி போலும் பேரொலியை எப்போதும் பெற்றிருக்கும். அத்தகு பெருமை மிக்க அப்பேரூரில் இருந்து பாராண்ட இரவிவன்மன், அமுதபதி எனும் அழகிய நல்லாளை மணந்து மனையறம் மேற்கொண்டு வாழ்ந்தான். அவர்கள் ஆற்றிய அறத்தின் பயனாய், தாரை, வீரை, இலக்குமி எனும் மகளிர் மூவர் பிறந்தனர். மூவரும் முறைப்படி வளர்ந்து மனப்பருவம் பெற்றனர்.

இரவிவன்மன், மகளிர் மூவர்க்கும் மணம் முடிக்க முனைந்தான். அங்க நாட்டின் கச்சயநகர்க் காவலனாய துச்சயன் என்பான் வேந்தர் பலரை வென்று, வெற்றிக் கழல் புனைந்த வீரனாதல் அறிந்து, அவனுக்குத் தாரை வீரை இருவரையும் மணம் செய்தளித்தான். இளையளாகிய இலக்குமி பெற்றோர் இருவர்க்கும் துணையாய், அசோதர நகரத்து அரண்மனையின் செல்வச் சிறுமியாய் வாழ்ந்திருந்தாள். நிற்க.

காந்தாரம் எனும் பெயர் பூண்ட பெரிய நாடொன் றிருந்தது; அதன் உட்பகுதியாய்ப் பூருவதேயம் என்றஆ.-4