பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

பேராறுகளையும் கணவனோடு கண்டுகளித்த பேறு பெற்றமையால் அவள் சிந்தை, செருக்கில் மேலும் ஆழ்ந்து விட்டது. அதனால், மணல் மேட்டில் அமைதியாகச் சிறிது பொழுது அமர்ந்திருக்கவும் அவள் விரும்பவில்லை; எழுந்தாள். கணவனை விடுத்துக் கானாற்றங்கரையே நடந்து சென்றாள். அவ்வாறு செல்வாள், ஒரிடத்தில் ஒரு பெரிய தேக்கிலையில், நாவற்கனி யொன்று வைக்கப் பெற்றிருப்பதைக் கண்டாள். நிறத்திலும், அளவிலும் பருத்த பனம்பழத்தை ஒத்திருந்தது அக்கரு நாவற்கனி. அதைப் பார்த்த அவள் செருக்கு மிகுதியால், அதைத் தன் காலால் மிதித்துக் கெடுத்தாள்.

காயசண்டிகை, கனியைத் தன் காலால் உதைத்து உருக்குலைப்பதை, அப்போது ஆங்கு வந்த ஒரு முனிவன் பார்த்துவிட்டான். விருச்சிகன் என்பது அவன் பெயர். மார்பில் முறுக்குண்ட பூணூல்; முடியில் திரித்து முறுக்கிய சடை; இடையில் மரவுரி ஆடை; இவற்றோடு காட்சியளித்தான் அக்கானகத்து முனிவன். தேக்கிலையில் நாவற்கனியை வைத்தவனும் அவனே. அதை அங்கு வைத்துவிட்டு, அக் கானகத்திற்கு அண்மைக் கண் உள்ளதும், தன்னகத்தே மலர்ந்த மலர்களின் மணம் நெடுந் தொலைவும் நாறுவதுமாய ஒரு பொய்கையில் நீராடப் போயிருந்தான். நீராடி, நாட் கடனை முடித் துக்கொண்டு நாவற்கனியை உண்ணும் நினைவோடு வந்த அவன், காயசண்டிகை கனியை மிதித்து அழிப்பதைப் பார்த்து விட்டான். கோபம் கொதித்து எழுந்தது.