பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

“ஏடி! பெண்ணே! என்ன காரியம் செய்து விட்டனை; இந்நாவற்கனி எளிதில் கிடைக்கக் கூடியதல்லவே, நாவற்கனிகள் அனைத்தினும் சிறந்தது. கடவுட்டன்மை வாய்ந்தது. பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை ஒரு பழம் ஈனும் இயல்பு வாய்ந்த மரத்தினின்றும் பெற்றது. தன்னை உண்டவர்க்கும் பன்னிரண்டாண்டளவும் பசி நோய் உண்டாகாவாறு காக்கும் பெருமை வாய்ந்தது. அத்தகு நன்மை வாய்ந்த நாவற்கனியை அழித்து விட்டனேயே; நானே, பன்னிரண்டாண்டிற்கு ஒரு முறையே உண்ணும் உயர்நோன்பு மேற்கொண்டவன். அதனால் இக் கனியை அரிதிற் காத்து உண்ணும் வழக்கம் உடையேன். இப்போது, நீ அக்கனியை அழித்துவிட்டாய். இனி வரும் பன்னிரண்டாண்டளவும் என்னைப் பற்றி வருத்தும் பசி நோயை எவ்வாறு தாங்கி உயிர் வாழ்வேன்! இவ்வாறு என்னை வருத்த விட்ட நீ நன்கு வாழ்வையோ! வாழக் கூடாது நீ; வாழவிடேன் நான். உன் செருக்கு அழிதல் வேண்டும். பன்னிரண்டாண்டளவும் பசி நோயால் பாழுறப் போகும் என்னைப் போலவே, நீயும் பாழுறல் வேண்டும். வானூடெழுந்து விரும்பும் இடங்கட்கு விரைந்து செல்லவுதவும் மந்திரம் உனக்கு மறந்து போகட்டும். உண்ண உண்ணப் பசி நீங்கா யானைத்தீ எனும் உறுநோய் உன்னைப் பற்றி வருத்துமாக, உன்னைப் பற்றி வருத்தும் அப்பாவங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து நான் உண்ணும் வரை உன்னை விட்டு அகலாதிருந்து உன் சக்தியை அழிக்குமாக” எனச் சினந்து சாபம் தந்து மறைந்துவிட்டான்.