பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


காதலியைத் தொடர்ந்து, கானாற்றுக் காட்சிகளைக் கண்டுகொண்டே வந்த காஞ்சனன், அவள் கனியைச் சிதைத்ததைக் கண்டு, அதனால் அவளுக்கும் அவள் கணவனாகிய தனக்கும் யாது கேடு நேருமோ என அஞ்சினான். அதனால், அவளை ஆங்கே விடுத்து அகன்றவன், விருச்சிகன் மறைந்த பின்னரே அவன் மீண்டான்; மனைவியை நோக்கி, “மதியிழந்து மாத்துயர் உற்றனை. ஈண்டிருப்பின் இடர்பல உண்டாம். ஆகவே, இனி ஒரு நாழிகையும் ஈங்கிருத்தல் கூடாது. நம் நாட்டிற்கு இப் போதே ஓடி விடுதல் வேண்டும். வானூடெழுக” எனக் கூறி விரைந்தான். அந்தோ! அவளால் அது இயலவில்லை. காயசண்டிகை மந்திரத்தை நினைவூட்டி நினைவூட்டிப் பார்த்தாள். முடியவில்லை. அது அவள் மனத்தை விட்டே மறைந்துவிட்டது. அதை உணர்ந்தாள் அவள். “அன்ப! முனிவன் இட்ட சாபத்தால் மந்திரம் மறந்தேன். அது மட்டுமன்று. வயிறுகாய் பெரும் பசி வேறு என்னை வாட்டத் தொடங்கிவிட்டது. அதன் வெம்மையைத் தாங்கமாட்டாது, என் உயிர் என்னை விட்டுப் பிரிந்து, விடுமோ என்று அஞ்சவேண்டியதாகிவிட்டது. என் செய்வேன்!” எனக் கூறிக் கண்ணிர் உகுத்தாள்.

காஞ்சனன் மனைவி கூறியது கேட்டு மனங் கலங்கினான்; மறந்த மந்திரத்தை அவளுக்கு நினைவூட்டல் தன்னால் இயலாதாயினும், அவளை வருத்தும் வான் பசியைப் போக்குதலாவது இயலும் என நம்பினான். பசிக் கொடுமையால் காதலி படும் பாட்டைக் கண்டு