பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கண் கலங்கினான். உடனே ஒடினான். காய் கனி கிழங்கு வகைகளில் நல்லனவற்றைத் தேடி நிறையக் கொணர்ந்து மனைவி முன் குவித்தான். அவள், அவற்றுள் ஒன்றையும் விடாது உண்டு தீர்த்தாள். ஆனால், அந்தோ! அப்போதும் அவள் பசி நோய் அகலவில்லை. நோய் கொடுமை தாளாது அவள் நொந்தாள்.

காதலிக்கு வந்துற்ற கேட்டினைக் கண்டு காஞ்சனன் கலங்கினான். அவளுக்குத் தன்னால் எவ்வுதவியும் செய்ய இயலாமை எண்ணி இடர் உற்றான். இறுதியில், “அன்பே! நாவலந்தீவில் தென் கோடியில் உள்ளதான இத்தமிழ் நாட்டில் புகார் எனப் பெயர் பூண்ட ஒரு பெரு நகர் உளது. குறையாப் பெருநிதி படைத்த பெருஞ் செல்வர்களின் வாழிடம் அப்பேரூர். அவர்கள் வளங் கொழிப்பது ஒன்றே வாழ்வின் பயனும் என எண்ணும் பண்பிலார் அல்லர். வறுமை காட்டி வந்து இரப்பார்க்குத் தம் வளத்தை வாரி வாரி வழங்கி வாழ்தலே விழுமிய வாழ்வனம் எனக் கொள்ளும் வான்புகழ் உடையவர் அவ் வணிகப் பெருமக்கள். அந்நகர் மிக்க தொலைவில் உளது. பறந்து அடைதல் உன்னால் இயலாத இப்போது அம் மாநகரை நடந்து அடைய நாள் பல ஆகும். எனினும், ஊக்கம் தளராது சென்று அவ்வூர் அடைக, உனக்குச் சாபவிடை ஆகும் வரை ஆண்டே வாழ்க” என அறிவுரை வழங்கி, அவளைப் பிரிய மனமின்றிப் பிரிந்து தன்னூர் அடைந்தான்.