பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63


கானாற்றங்கரை நிகழ்ச்சியால் காயசண்டிகையின் செருக்கடங்கிற்று. கணவன் இட்ட கட்டளையை ஏற்றுக் காவிரிப்பூம்பட்டினம் அடைந்து வாழ்ந்திருந்தாள். காஞ்சனன், ஆண்டுதோறும் புகார் நகரில் நிகழும் பெரு விழாவாகிய இந்திர விழாவின்போது வந்து, காதலியைக் கண்டு, அவளுக்கும் ஆறுதளித்துத் தானும் சிறிது ஆறுதல் உற்றுச் செல்லத் தொடங்கினன். கடந்த ஆண்டுகளையும், இனி, நோயோடு கடக்க வேண்டிய ஆண்டுகளையும் கணக்கிட்டவாறே வாழ்நாளைக் கழித்து வந்தாள் காயசண்டிகை.

புகார் நகரத்துப் பெருங்குடிச் செல்வர் துணையால் பதினோராண்டுகளைக் கழித்துவிட்டாள். பன்னிரண்டாம் ஆண்டும் தொடங்கிவிட்டது. தனக்குச் சாபவிடை உண்டாகும் நாளே ஆவலோடு எதிர்நோக்கியிருந்தாள். பற்றி வருந்தும் பசி நோய் எவ்வாறு நீங்குமோ? என்று நீங்குமோ? யாரால் நீங்குமோ என்ற வேட்கை தவிர, அவள் உள்ளத்தில் வேறு உணர்வுகள் இடம் பெற்றில.

இந்நிலயில் அனைவரும் வியக்கும் செய்தியொன்று அவள் காதில் பட்டது; மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு செல்லப்பட்ட மாதவி மகள் மணிமேகலை, புகார் நகர் மீண்டாள். மீண்டவள் அள்ள அள்ளக் குறையாததும் அனைத்துயிர்களின் பசிநோயைப் போக்க வல்லதும் ஆய அமுதசுரபி எனும் அரிய கலத்தோடு வந்துளாள் என்ற செய்தி புகார் நகரத்துப் பெரு வீதிகளில் பேசப்பட்டது. அச்செய்தி காயசண்டிகையின்