பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

காதுகளில் அமிழ்தம்போல் சென்று பாய்ந்தது. பன்னி ரண்டு ஆண்டுகளாகத் தன்னைப்பற்றி வருத்தும் பசிநோய் அன்றே அகன்றதுபோல் அகம் மகிழ்ந்தாள். உடனே, மணிமேகலையைத் தேடி அடைந்தாள். அவள்பால் தன் வரலாறு உரைத்து வருந்தினாள்.

காயசண்டிகை கடந்த பல ஆண்டுகளாகக் காவிரிப் பூம்பட்டினத்துத் தெருக்களில் அலைந்து திரிந்தவளாதலின், அவளை, மணிமேகலைபண்டே அறிந்திருந்தாள். அதனால், தன்னை வந்தடைந்த அவளை அன்போடு வரவேற்றாள். வாடாத இவள் வயிற்று நோயைப் போக்கும் பெருமை, அமுதசுரபி அளிக்கும் முதற்பிடிக்கு உண்டாகுக என உளம் கொண்டாள். அவ்வுணர்வோடு அமுதசுரபி ஏந்தி வீதியில் புறப்பட்ட மணிமேகலை அமுதசுரபியினின்றும் ஒரு பிடி எடுப்பதன் முன்னர், சிறந்தார் ஒருவர் அளிக்கும் ஒருபிடி உணவை அதில் இடுதல் நன்றென நினைத்தாள்.

மணிமேகலையின் மனக்குறிப்பைக் காயசண்டிகை கண்டுகொண்டாள். உடனே, அவளுக்குக் கடல்வளம் கொழிக்கும் அக்காவிரிப்பூம்பட்டினத்தில், அவ்வளத்தை கொண்டு வந்து குவிக்கும் வணிகர் குடியில் பிறந்த ஆதிரை என்பவள் வரலாற்றையும், அவள் கற்பின் பெருமையையும் விரிவாக எடுத்துரைத்து, “மணிமேகலை அவ்வாதிரைமனை புகுந்து முதற்பிச்சை யேற்றல் முறையாம்” என இயம்பினாள். அவ்வாறே அவளை ஆதிரை மனைக்கு அழைத்துச் சென்றாள். மணிமேகலையின்