பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

வருகையையும், அவள் மனக்கருத்தையும் ஆதிரை உணர்ந்து கொண்டாள். உடனே மனையகம் புகுந்து, அங்கை நிறைய உணவேந்தி வந்து, “பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக” என உளமார வாழ்த்தி அமுத சுரபியில் இட்டாள்.

ஆதிரைபால் ஆருயிர் மருந்தினைப் பெற்ற மணிமேகலை, அதில் ஒரு பிடி எடுத்துக் காயசண்டிகைக்கு அளித்தாள். அதைக் காயசண்டிகை ஆர்வமோடு வாங்கித் தன் வயிற்றினுள் இட்டாள். உடனே, இராமன் இலங்கை அடைவான் வேண்டிக் கடலிடையே அணை அமைக்க முனைந்த வானரப் படைகள் கொண்டு வந்து எறிந்த மலையும் மரங்களுமெல்லாம், ஆழ்கடல் நீரில் ஆழ்ந்து இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போனது போல், உண்ட உணவெல்லாம் எங்கோ மறைந்து போகத் தன்னை நெடிது வருத்திய யானைத்தீ நோய் மணிமேகலை அளித்த ஒருபிடி உணவால் உள்ளழிந்து போனமை கண்டு மனம் நிறைமகிழ் வெய்தினாள். தனக்குச் சாபவிடை கிடைத்துவிட்டது; அவ்வளவும் மணிமேகலையின் அருள் என நினைந்து அவளை வாழ்த்தி வணங்கினாள். பின்னர், “ஆருயிர் மருத்துவியாம் என் அன்னே! கேள்; பிறவித்துயர் கெடப் பெருந்தவம் மேற்கொண்ட பெரியோர்கள் வாழும் சக்கரவாளக் கோட்டத் தில் அறச்சால் ஒன்று உளது. வறுமையால் வருந்தி வருவோர்களே யெல்லாம் வரவேற்று வாழிடம் நல்கும் வகையில், அதன் வாயில் அடையா நெடுவாயிலாய்ஆ.-5