பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

எப்போதும் திறந்து கிடக்கும். ஆங்கு உலகெங்கிலும் உள்ள உறுபசியாளர்களும் ஆதரிப்பார் இன்மையால் அலைந்து திரிவோர்களும் பல்லாயிரக் கணக்கில் பசி நோயால் வருந்தி, இடுவோரை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கின்றனர். அமுத சுரபி அவர் பிணிபோக்கும் அரு மருந்தாகுக. நீ ஆங்குச் செல்வாயாக; நான் என் நாடு அடைகின்றேன்” எனக் கூறி அவள்பால் விடை பெற்றுக் கொண்டாள்.

இருந்து அறம் புரிதற்கு ஏற்ற இடத்தை மணிமேகலைக்கு அறிவித்த காயசண்டிகை என்பாள் பிறந்த ஊரைக் காணவேண்டும். ஆண்டு தவறாமல் ஈண்டுவந்து தன் நிலைகண்டு இரங்கிச் செல்லும் கணவனைக் காண வேண்டும். சாப விடை பெற்ற இன்பச் செய்தியை இயம்பி அவன் துன்பத்தைத் துடைத்தல் வேண்டும் எனத் துடித்தாள். உடனே மந்திரம் ஓதி வானுடெழுந்து விஞ்சையர் உலகு நோக்கி விரைந்தாள். இடையே வித்த மலை குறுக்கிட்டது. விந்தம் துர்க்கையின் வாழிடம். அதனால் வான்வழிச் செல்வார் விந்தத்தை வலம் வந்து செல்வதல்லது கடந்து செல்லக் கருத்திலும் நினையார். கடந்து செல்வார் கேடுறுவார். காயசண்டிகையின் உள்ளத்தில் பிறந்த ஊர்ப்பற்றும், அன்பனக் காணும் ஆர்வமுமே ஓங்கிமுன் நின்றமையால் இவ்வுண்மையை மறந்து விட்டாள்; விந்த மலைமீது பறந்துவிட்டாள். அதை, அம்மலையைக் காத்து நின்ற வித்தாகடிகை கண்டாள்; கடுஞ் சினம் கொண்டாள். தன் பேரொளிப் பிழம்பால்,