உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

சாந்தியின் சிகரம்

ஜெயி:- என்ன! மூன்று தத்துவங்களா! அதென்ன ஸார்! சொல்வதுதான் சொல்கிறீர்களே, மருந்து வரும் வரையில் விரிவாகச் சொல்லி விடுங்கள், கேட்கலாம்.

டாக்டர்:- ஸார்! நான் வைத்யத் தொழில் சேவையுடன் இவைகளையும் சேர்த்தேதான் செய்து வருகிறேன். சமயம் வாய்க்கும் போது, எதையும் விடக் கூடாது. மூன்று தத்துவங்கள் எவை என்றால், நாம் என்று பூமியில் பிறந்தோமோ, இறப்பது நிச்சயம். அதை எத்தகைய மகான்களாலும், தடுக்க முடியாது. இறந்து விட்ட பின், பிறப்பு என்பதை இல்லாமல், நாம் ஜீவித்திருக்கும் போதே, அதற்கான முறையில் வாழ்க்கையை நடத்த வேண்டும். இது ஒன்று.

இரண்டாவது. பாபம் என்கிற ஒரு பயங்கரம், மனிதனைச் சுத்தியலைகிறது. அதைத் தெரிந்து செய்தாலும் குற்றம்,. தெரியாமல் செய்தாலும் குற்றம் என்பதை முதலில் உணர வேண்டும்…

ஜெயி:- என்ன! தெரிந்து செய்தால்தான் குற்றம். தெரியாமல் செய்தால், எப்படி ஸார் குற்றமாகும்? நான் தெரியாமல் செய்து விட்டேன் என்று ஒப்புக் கொண்டால், அதற்கு தண்டனை கூட குறைக்கப் படுகிறதே…

டாக்டர்:-ஸார்! உங்கள் வார்த்தையையே வைத்துக் கொண்டு பாருங்கள். தெரியாது செய்த குற்றத்திற்கும் தண்டனை உண்டு என்றும், குறைக்கப்படுகிறதென்றும் சொல்கிறீர்கள். அப்போது என்ன அர்த்தம். தெரியாது முள்ளின் மேல் காலை வைத்தாலும், குத்துகிறது. தெரிந்து வைத்தாலும் குத்துகிறது.