உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

சான்றோர் தமிழ்

காலை 5 மணிக்கே ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கற்கின்ற மரபு இவரிடம் வளர்ந்திருந்தது. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மட்டும் ஆசிரியருக்கு மாதம் நான்கு அணா சம்பளம் கொடுத்துப் படிக்கத் தொடங்கிய சாமிநாத ஐயர் தம் வாழ்நாளின் இறுதிவரையில் அந்தப் படிப்பையே தொழிலாக நெஞ்சில் நிலையாக நிறுத்தியிருந்தார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு நூலையும் எளிய விலைகொடுத்தும் வாங்க முடியாத நிலையில் சாமிநாத ஐயர் இருந்தார். புலவர்களை அண்டி அவர்களிடமிருந்து ஒரு சிறிய நூலையும் அன்பளிப்பாகப் பெற்றாலும் அதற்காக அருநிதி-புதையல் கிடைத்தவர்போல் பெரிதும் மனம் மகிழ்ந்தார். இவரே பிற்காலத்தில் எண்ணற்ற நூல்களைச் சுவடியிலிருந்து எடுத்து அருமையாகப் பதிப்பித்துத் தமிழ் உலகுக்குத் தந்து உதவியவர் என்பதையும் நாம் நினைவு கூர வேண்டும்

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்களிடம் பயின்றது

1880ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் மாயூரம் சென்றார். அங்கே அப்போது திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக இருந்த தமிழ்நாட்டின் பல திசைகளிலிருந்தும் பாடம் சொல்லிக் கொள்ளவந்த மாணாக்கர் பலருக்கும், சில பல ஆதினங்களைச் சார்ந்த குட்டித் தம்பிரான்களுக்கும் பாடம் சொல்லித் தந்த-மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இருந்தார்கள். அவர்களை அண்டிச் சாமிநாத ஐயர் பல நூல்களைக் கற்றார். இதற்கு இடையே 1869ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்ததனையும் குறிப்பிடவேண்டும். திருமணம் ஆனாலும் உடனடியாக இல்லறவாழ்க்கையில் சாமிநாத ஐயர் பற்றுக்