பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டு நக்கீரர்

99

அருச்சுனனுக்கு அவன் தமிழ் மனைவியான பாண்டியன் மகள் மாரியைத் தூது அனுப்பியதாகக் கற்பித்துக் கூறும் கவின் மிகு நூலாகும் இது. இந்நூல் கற்பனை வளம் மிக்கது: காதலறத்தை விளக்குவது; பழந்தமிழ் இலக்கணமாகிய நூலிற்கு இலக்கியமாகத் திகழ்வது; இருநூற்றிருபத்திரண்டு பாக்களைக் கொண்டு கழிபேரின்பம் பயப்பது; பெரும் புலவர் அருணாசலக் கவிராயரால் “சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்குள் இயற்றப் பெற்ற தமிழ்ப் பிரபந்தங் களுள் இம் ‘மாரி வாயில்’ பொருள்வளம் சொல்லின்பங்களில் சிறந்து விளங்குவது” என்று பாராட்டப்பட்டுள்ளது.

மங்கலங் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி

இந்நூல் காதல், வீரம் ஆகிய இரு பெற்றியினையும் ஒருங்கே கூறுவதாகும். மங்கலங்குறிச்சி என்னும் சிற்றுார் பொதியமலை அடிவாரத்தில் உளது. தைத்திங்கள் தலை நாளில் நீராட வைகுறு விடியலில் ஆற்றுக்குச் சென்று தலைவி கால் தடுக்கிச் சுருட்டும் சுழியில் விழுந்தாள். வெள்ளம் இழுத்த அவளை அவ்வழியே வந்த தலைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். அன்று மாலையில் அவ்வூரில் நடந்த விலையர் போட்டியில் வெற்றி கண்டான் தலைவன். வேங்கைப் புலியை வீழ்த்திய கையோடு தலைவி கூந்தலிற் செருகி அழகு பார்க்க முல்லைக் கொத்தொன்றையும் வில்லாற் கொய்தான். இந்நிலையில் வீடு சென்ற தலைவியை மாமி பழித்தாள், மகளுக்காகப் பரிந்து வந்தாள் சித்தி. அதற்கிடையில் வெற்றி ஊர்வலம் வந்த தலைவனை அக்காட்சி பொறாத கெடுமதியாளன் ஒருவன் குத்தி விட்டான். குத்தியவனை இளைஞர் படை சிறைக்கூடம் சேர்த்தது. புண்பட்ட தலைவன் மருத்துவம் செய்யப் பெறும்போது தலைவியின் பெயரைத் தன்னை மறந்த நிலையில் உச்சரித்தான். செய்தியறிந்த தலைவி ஓடிச்சென்று தன்