பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல்

103


பிறப்பும் கல்வியும்

திருவாரூரில் விருத்தாசல முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் செங்கற்பட்டு துள்ளல் எனும் கிராமத்தில் 26.8-1883 இல் பிறந்த கலியாணசுந்தரனார் சென்னை, இராயப்பேட்டை ‘ஆரியன் பிரைமரி பாடசாலை’யிலும், வெஸ்லி கலாசாலை உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளையிடம் தமிழ்ச் சுவையறிந்த இவர், மயிலை தணிகாசல முதலியாரிடம் சித்தாந்தம் பயின்றார். பின் மறை மலையடிகளிடம் இலக்கியத் தேர்ச்சி பெற்றார்.

சமயப் பணியும் ஆசிரியப் பண்பும்

சைவ நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த திரு.வி.க. இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த ஜனசபையிலும். திருவல்லிக்கேணிச் சிவனடியார் திருக்கூட்டத்திலும் சொல் லாலே உழவாரப் பணிபுரிந்த நாவுக்கரசராய்த் திகழ்ந்தார். ஸ்பென்சர் கம்பெனியில் பணியாற்றியிருந்த காலத்தில், சுதந்தி ரப்போராட்டத்தில் தீவிரமாகச் செயலாற்றியிருந்த இவர் ‘திலகர்’ சிறைப்பட்ட செய்தியறிந்து பணியை விடுத்தார். நாட்டுணர்வில் நாட்டம் கொண்டு விடுதலை இயக்கத்தில் ஈடுபட விழைந்தார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியராகப் பணி ஏற்றார். தொடர்ந்து வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியர் பொறுப்பினைச் சிறப்பித்தார். இக்கால கட்டத்தில் சைவ சித்தாந்த மகா சமாசத்திலே இலக்கியவாணர்களும் பாமர மக்களும் போற்றும் வண்ணம் செஞ்சொல் நடையில் சொற் பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.