பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல்

109

றிருக்கக் காணலாம். இப்பாடல்களில் ஒரு பொதுமை நோக்கு இலங்கவதைக் காணலாம்.

“பலப்பல மொழியில் பலப்பல பெயர்கள்
பகர்ந்த சான்றோர் நுகர்ந்த இன்பம்
ஒன்றே அன்றோ கன்றே தெளியின்
ஒருவ நிற்கே மருவிய பெயர்கள்
பலவெனும் உண்மை நிலவுதல் உறுதி
எப்பெயர் நின் பெயர் எப்பதி நின்பதி
எவ்வுரு நின்னுரு எம்மொழி நின்மொழி
பேரெலாம் நீயே பேரிலான் நீயே
பதியெலாம் நீயே பதியிலான் நீயே
உருவெலாம் நீயே உருவிலான் நீயே
மொழியெலாம் நீயே மொழியிலான் நீயே
எல்லாம் நீயே”

-திருமால் அருள்வேட்டல்.

என்று அவர் தென்திருப்பேரை யுறையும் திருமாலைப் பரவி நிற்கும் பகுதியில் பொதுமையும் இலக்கிய நுட்பமும் செறிந் திலங்கக் காணலாம்.

திருவரங்கத்தம்மானைத் துதிக்குமுகமாகத் திரு.வி.க. அவர்கள் பாடியுள்ள பின்வரும் பாடலில் செஞ்சொலின்பமும் நெஞ்சினிக்கும் நேயமும நிறைந்திருக்கக் காணலாம்.

“மணிகொழிக்குங் காவிரியாய் மலர்நிறைந்த பொழிலாய்
மணங்கமழும் மதியுடையார் வாயொழுகும் யாழாய்
அணிகொழிக்கும் வேனிலிடை ஆடிவருங் காற்றாய்
அமைதியளி திங்கள் பொழி ஆனந்த நிலவாய்
பணி கொழிக்கும் அடியவர்கள் பத்திவிளை பாட்டாய்
பரந்துநிற்குங் காட்சியெலாம் பார்க்கின்ற வேளை
பிணிகொழிக்கும் ஏழையுய்யப் பேசரிய துயிலின்
பெற்றியருள் செய்பாயோ பேரரங்க வேந்தே”

-திருமால் அருள் வேட்டல்