பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சான்றோர் தமிழ்

114

ஒருவன் பொருளை ஒருவன் கவரும்
இழிவு வளரும் வழியைக் கண்டான்;
கொலையுங் களவுங் கள்ளுங் காமமும்
பொய்யும் வாழ்வில் மொய்த்துக் கொண்டன
சுரண்டல் வாழ்வு திரண்டு மதர்த்தது
செயற்கை வாழ்க்கையில் பயிற்சி பெற்றான்
வளர்ச்சி வாழ்வில் உணர்ச்சி யற்றது.”

-வாழ்வும் வளர்ச்சியும்

இந்தப் பகுதியில் உலக மக்கள் இயற்கையைத் துறந்து, செயற்கையைப் பற்றி நின்று, அறந்துறந்து மறம் மிகுந்து வாழும் நெறியல்லா நெறியைக் கண்டிக்கிறார்.

இவ்வாறு திரு.வி.க. அவர்கள் 1931ஆம் ஆண்டு வரையில் இயற்றிய செய்யுள் நூல்களின் எண்ணிக்கை பதினான்காகும். இந் நூல்களில் அவர்தம் பொதுமையுணர்வும், இலக்கிய நெஞ்சமும் இனிது விளங்கக் காணலாம். திரு.வி.க. ஒர் உயரிய கவிஞர் என்பதனை இந்நூல்கள் தெரிவித்து நிற்கின்றன.

1953ஆம் ஆண்டு அவர் இறந்தபோது பி. ஸ்ரீ. அவர்கள், ‘பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம்தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம் என்ற கருத்துத் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அவர் ஆற்றிய பணியின் எல்லையை நன்குணர்த்துகிறது.

இலக்கியச் செல்வராய், சமய மறுமலர்ச்சியாளராய், செந்தமிழ்ப் பேச்சாளராய், தொழிலாளர் தலைவராய், நாளிதழ் நாயகராய், அரசியல் தூயவராய் விளங்கித் தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் சீரிய இடத்தைப் பெற்றுச் செம்மாந்து நிற்பவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களே ஆவர்.