புதுவை தந்த புரட்சிக் கவிஞர்
125
‘காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டது இன்பம்’ என்பர் ஆன்றோர். ஒட்டும் இரண்டுள்ளத்தைத் தம்மில் ஓங்கிய காதலினைக் குட்டை மனத்தாலே கோபப் பெருக் காலே வெட்டிப் பிரிக்க வரும் வீணரைச் சாடி,
“காதலிருவர்களும்—தம்
கருத்தொருமித்த பின்
வாதுகள் வம்புகள் ஏன்? இதில்
மற்றவர்க் கென்ன உண்டு”
என்றும்,
“............ புவியே—இரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடைபுரிந்தால்—நீ
நிச்சயம் தோல்வி கொள்வாய்”
என்றும்,
“மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக் கண்டார்?”
என்றும் கூறிக் காதல் மணத்தை வாழ்த்தி வரவேற்கின்றார்.
வயது முதிர்ந்த ஆடவனுக்கு இளம் பெண்ணொருத்தியைத் திருமணத்தில் தந்து இளமை வாழ்வினைப் பலியாக்கும் அநீதியினைச் சாடுகிறார்.
‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர். விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார்.