பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுவை தந்த புரட்சிக் கவிஞர்

131

களாகிய தோட்டத்தில் புரட்சி மலர்கள் பல பூத்துக் குலுங்கு கின்றன என்பதும் பெற்றாம். புரட்சிக் கவிஞர் அவர்கள் மறைந்தபொழுது சான்றாண்மைக்கு ஆழியெனத் திகழும் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், பாரதி தாசன் பற்றிக் கூறிய சொற்களை ஈண்டு நினைவிற் கொள்ளல் இக்கட்டுரைக்குப் பொருத்தமாகும்.

“புரட்சிக் கவிஞர் என்றாலே இந்த நூற்றாண்டிலும் இதற்கு முந்தைய நூற்றாண்டிலும் வேறு யாரையும் குறிக்காமல் பாரதிதாசன் ஒருவரையே குறிக்குமாறு தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்றுவிட்டார். சிறந்ததை மிகமிக விரும்பிப் போற்றுதலும், தீயதை மிகமிக வெறுத்துத் தூற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டில் புகுந்து, சமுதாயத்தில் இடம் பெற்றுவிட்ட தீய பழக்க வழக்கங்களையும் முடக்கருத்துகளையும் கடிந்து பாடிப், படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை எழுப்பிய புரட்சியாளர் அவர். அவருடைய பாட்டுக்களில் விழுமிய கற்பனையும் உண்டு. வேகமான உணர்ச்சியும் உண்டு; பழந்தமிழ் மரபும் உண்டு. புத்துலகச் சிந்தனையும் உண்டு. தமிழர்தம் வாழ்வுக்கு அவர் தம் எழுத்தும் பேச்சும் அரண் செய்து வந்தன.”