பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை

133


தோற்றம்

திருநெல்வேலியில் நெல்லை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இராசவல்லிபுரத்தில் தோன்றியவர். 1895ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இரண்டாம் நாள் துன்முகி ஆண்டு பூச நன்னாளில் பிறந்தவர். இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் கார்காத்த வேளாளர் மரபில் கொழுவடைக் கோத்திரத்தில் வந்த பிறவிப்பெருமாள் பிள்ளையும், அவர்தம் வாழ்க்கைத் துணையான சொர்ணத் தம்மாளும் ஆவர். தம் பெற்றோர்க்குப் பதினோராவது பிள்ளையாகத் தோன்றியவர். இவர்க்கு முன் தோன்றிய பதின்மரும் இவ்வுலகை நீத்து அவ்வுலகடைந்தனராதலின் பதினோராவது பிள்ளையானாலும் தவமிருந்து பெற்ற தவப்புதல்வர் இவர். பெற்றோர்க்கு ஒரு பிள்ளையாய் செல்லப்பிள்ளையாய்-செல்வப் பிள்ளையாய் வளர்ந்தவர்.

கல்வி

ரா. பி. சேதுப்பிள்ளையின் ஆரம்பக்கல்வி இராசவல்லி புரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்திலே தொடங்கியது. அந்நாள் நண்பர் அழகிய கூத்தர் என்பவர். தொடக்கப் பள்ளியில் கல்வி பயிற்றுவித்தவர்கள் அருணாசல தேசிகரும் செப்பறை அடிகளாரும் ஆவர். அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், ஆறுமுக நாவலரின் பாலபாடப் பகுதிகள் போன்றவற்றைப் பயின்றார். செப்பறை அடிகளார் சிவஞான மாபாடியத்தைப் பயிற்றுவித்தார்.

ஐந்தாம் வகுப்புவரை இராசவல்லிபுரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்ற இவர் தம் உயர்நிலைக் கல்வியைத் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டையில்