பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

சான்றோர் தமிழ்

கத்தோலிக்கப் பாதிரிமார்களால் நடத்தப்பெறும் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அப்பள்ளியில் இவர் தம் செல்லப் பெயர் இரும்பு மனிதர். இவர்தம் திண்மையைக் கண்டே மாணவர்கள் இவ்வாறு அழைத்தனர். உயர்நிலைப் பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தவர். சுப்பிரமணியப் பிள்ளை என்பவர். உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்புப் பயிலும்போது நல்லொழுக்கப் பரிசாகத் திருக்குறள் நூலினைப் பெற்றார். பெற்றவர் ஊர் வந்தபோது தொடக்கப்பள்ளி ஆசிரியரான செப்பறை அடிகளாரின் அறிவுரையால் நாள்தோறும் திருக்குறளை மனனம் செய்தார். இதுவே பின்னாளில் திருக்குறள் வல்லுநராக இவர் திகழ்தற்குக் காரணமாகியது. பள்ளி மாணவராக இருந்த காலத்தில் பாளையங்கோட்டைக்குச் சைவ சபைத் தொண்டர்படைத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் சோழவந்தான் அரசஞ்சண்முகனாரால் சிறுத்தொண்டன்’ என்று பாராட்டப் பெற்றார். பதினைந்தாம் ஆண்டில் தம் பள்ளி வாழ்க்கையை முற்றுவித்த இவர், அதே ஆண்டில் தம் அருமைத் தாயையும் இழந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்த இவர் திருநெல்லிவேலி இந்துக் கல்லூரியில் தம் இடைக்கலை (Indermediate) வகுப்பினைத் தொடர்ந்தார். இடைக்கலையில் இவருக்குத் தமிழ் பயிற்று வித்தவர் தொல்காப்பிய வல்லுநர் சிவராமபிள்ளை என்பவர். இந்துக் கல்லூரி தமிழ்ப் பேரவைத் தலைவராகத் திகழ்ந்த இவர், முதலாண்டில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதன்மையாக வெற்றி பெற்றார். இதனால் அரசினரால் வழங்கப்பட்ட உதவிப்பணத்தையும், நூல்களுக்கெனத் தனியாக ஐம்பது வெண்பொற்காசுகளையும் பெற்றார். இடைக்கலையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.