பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை

135

இடைக்கலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் 1915 ஆம் ஆண்டில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தம் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கினார். பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை வகுப்பில் வரலாறும் பொருளாதாரமுமே இவர் தம் விருப்பப் பாடங்களாக அமைந்தன. காரணம் அந்நாளில் தமிழுக்குத் தனியிடம் இல்லை. பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த அடுத்த ஆண்டில் 1916இல் கல்லூரி மன்றத்தில் நடை பெற்ற தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதன்மையாக நின்றார். அப்பேச்சுப் போட்டியில் இவர்தம் உரையினைச் செவிமடுத்த கல்லூரி முதல்வர், ஆங்கிலப் பேராசிரியர். தமிழ்த்துறைத்தலைவர் திருமணம் செல்வக் கேசவராய முதலியார். நடுவர் சதாசிவ ஐயர் ஆகியோர் அனைவரும் போற்றினர். இதன் விளைவாக இளங்கலை முடித்த உடனேயே பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறையில் சிற்றா சிரியராகப் பணிபுரியும் வாய்ப்புக் கிட்டியது. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைச் சிற்றாசிரியர் (Tutor)சேதுப்பிள்ளை சட்டக் கல்லூரி மாணவராகச் சேர்ந்து சட்டக் கலையினையும் பயின்றார், இரண்டாண்டுகளில் சட்டக் கல்வியையும் வெற்றியுடன் முடித்துக் கொண்டு நெல்லை சென்றார்.

மகட் கொடை மன்றம்

நெல்லை சென்ற இவர் நெல்லையில் பிள்ளையன் மரபில் தோன்றிய நெல்லையப்பபிள்ளை என்பவருக்கும் அவர்தம் இரண்டாவது மனைவி பருவதத்தம்மாள் என்பவருக்கும் மகளாகத் தோன்றிய ‘ஆழ்வார் சானகி’ என்பவரைத் தம் இருபத்து மூன்றாவது வயதில் வதுவை நன்மணம் புரிந்து கொண்டார்.