பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சான்றோர் தமிழ்

சிலருக்கு மட்டுமே ஓலைச்சுவடி வடிவில் காட்சி வழங்கிக் கொண்டிருந்தது. பழம் பெருமை வாய்ந்த-தொன்மை வாய்ந்த-தமிழ் இலக்கியங்கள் பல கடல்கோளாலும், தமிழர் கவனக் குறைவாலும் அழிந்து ஒழிந்தன. இறையனார் களவியல் உரை குறிப்பிடும் பல இயற்றமிழ் நூல்களும், இசைத்தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் பெயர் அளவில் தெரிய வருகின்றனவே அன்றி, அவைகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில்,

‘வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’

என்று தமிழகத்தின் தென்பகுதி வெள்ளத்தால் அழிந்த செய்தியினைப் புலப்படுத்தியுள்ளார். சாமிநாத ஐயரும் அவர் வாழ்ந்த காலத்தில் மூடபக்தி நிறைந்த பொதுமக்கள் சிவ ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கில் விட்ட அவல நிலையினைப் பின்வருமாறு சுட்டியுள்ளார்.

‘ஆடி மாதம் 18ஆம் தேதியில் பழஞ் சுவடிகளை எல்லாம் சேர்த்து ஒரு சப்பரத்தில் வைத்து மேள தாளத்துடன் இழுத்துச் சென்று ஆற்றிலோ குளத்திலோ விடுவார்கள்.’

(என் சரித்திரம்; பக்கம்: 85)

என்று குறிப்பிட்டுள்ளார். எனவே ஓலைச்சுவடி விடுவோரிடமிருந்து பெற்றுப் பழம்பெரும் நூல்களை அச்சு வாகனம் ஏற்றிய பெருமைக்கு உரியவராகச் சாமிநாத ஐயர் விளங்குகிறார். சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். ஜைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவகசிந்தாமணியை