பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

சான்றோர் தமிழ்

வில்லும்’ என்பன. ‘வேலும் வில்லும்’ என்ற நூல் கம்பரும் கச்சியப்பரும், மூவர் தமிழும் முருகனும், திருச்செந்துார் முருகன் என்ற மூன்று கட்டுரைகளின் தொகுப்பாகும். கவிஞரும் கலைஞரும் உரையாடுவது போன்று அமைந்தது ‘கடற்கரையிலே’ என்ற நூல். விருதைத் தமிழ்க் கழகத்தின் சார்பில் வெளிவந்த தமிழ்த் தென்றல் என்ற இதழில் வெளி வந்த தொடர்கட்டுரைகள் இருபதின் தொகுப்பு நூல் இது. தமிழக ஆறுகளின் சிறப்பு, அவற்றின் கரைகளில் அமைந்த நகரங்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு இவற்றை எடுத்துக் கூறும் ‘ஆற்றங்கரையினிலே’ கல்கியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள் நாற்பத்தெட்டின் தொகுப்பு நூல் ஆகும். இது 1961 இல் வெளிவந்தது.

‘வேலின் வெற்றி’, ‘திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற இரு நூல்களும் முறையே கந்த புராணத் திரட்டையும் திருக்காவலூர்க் கலம்பகத்தையும் தழுவி எழுதப்பட்ட உரை நூல்கள் ஆகும்.

Words and their Significance. Dravidian Comparative Vocabulary, Common Dravidian Proverbs என்பன இவர் ஆங்கிலததில் எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகும்,

நடை நலம்

1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது.

2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார்.

3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம்.