பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை

149

4. ரா. பி. சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும்.கட்டுரை நடையும் ஏறக்குறைய திரு. வி. க. அவர்களின் பேச்சு நடையையும் எழுத்து நடையையும் ஒத்ததாகவே இருக்கும்,

‘உரைநடையில் தமிழைப்போல் நுகரவேண்டுமானால் திரு. வி. க., சேதுப்பிள்ளை ஆகிய இருபுலவர்களின் செந்தமிழைச் செவியில் மடுக்க வேண்டும்.’

என்ற யோகி சுத்தானந்த பாரதியின் கூற்றும் இதனை உண்மைப்படுத்துகிறது.

5. இவர்தம் நடை தனித்தமிழ் நடையாகும். எதுகை மோனை இன்பத்திற்காகக்கூட இவர் வடமொழிச் சொற் களைக் கையாள்வதில்லை. இவர்தம் தனித் தமிழ் ஆரவாரமற்றது. திட்ப நுட்பம் சான்றது.

அருமையான தமிழ்ச்சொல் ஒன்றிருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பாருண்டோ?

—அலையும் கலையும், ப. 32.

என்ற வினா, இவர்தம் தமிழ் ஆர்வத்தை அன்றோ புலப்படுத்துகின்றது.

6. இவர்தம் நடையில் எதுகையும் மோனையும் மிகுதியாக இடம் பெறும். சான்றாகப் பின்வரும் பகுதியைப் காட்டலாம்.

“காஞ்சி மாநகரம் தெய்வம் மணக்கும் திருநகரம். எம்மருங்கும் கோயில்களும், கோட்டங்களும் நிறைந்து, இறையொளி வீசும் இந்நகரில் “கச்சி ஏகம்பா!” என்று கைகூப்பித் தொழுவோரும், “கஞ்சி வரதப்பா!” என்று கசிந்துருகி நிற்பாரும்