பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை

151

13. சொல்லொடு சொல்லையும் கருத்தொடு கருத்தையும் ஒப்புநோக்கிச் சுவையையும் பயனையும் இணைக்கும் உன்னத நடை

14. பேராசிரியரின் உரைநடை பயிலுவோர் உள்ளத்தில் தமிழார்வத்தைப் பெருக்கெடுக்க வைப்பது. சேதுப்பிள்ளை அவர்கள் காலத்தில் தமிழார்வம் குறிப்பிடத் தக்க (அல்லது) பாராட்டும் அளவில் இல்லை. ஆயின் அதனைத் தட்டி எழுப்பி அந்த ஆர்வத்தை வளர்த்த பெருமை சேதுப்பிள்ளையின் நடைக்கு உண்டு.

15. தக்க இலக்கியச் சொற்களையும் வழக்குச் சொற் றொடர்களையும் மணிமிடை பவளம் போலக் கட்டுரைகளில் எடுத்தாண்டமையால் இவர்தம் நடை படிப்பவரின் தமிழ் உரைநடைத் திறத்தை உயர்த்தியது. தனித்தமிழின் இனிமை யையும் ஏற்றத்தையும் நிலைபெறச் செய்தது. தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் உலகுக்கு அறிமுகப்படுத்தியது.

கொடை வள்ளல்

தமிழ்ப் புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள் என்ற ஒரு நிலை இருந்தது. இந்நிலையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார் சேதுப் பிள்ளை.

அண்ணாமலை, சென்னைப் பல்கலைக் கழகங்களுக்குத் தனித்தனியே இருபத்தையாயிரம் வெண்பொற்காசுகள் வழங்கினார். இதன்படி ஆண்டுதோறும் இப்பல்கலைக் கழகங் களில் தமிழ் இலக்கியம், சமயம் பற்றிய சொற்பொழிவுகள் நடைபெற வேண்டும். வட்டித் தொகையாக வரும் ஆயிரத்தில் ஒரு பாதி சொற்பொழிவாளருக்கும் மறுபாதி பொழிவை நூலாக்கவும் பயன்பட வேண்டும் என்றும் திட்டமிட்டார்.