பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை

153

“சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்ற சேதுப்பிள்ளை, இருபத்தைந்து ஆண்டுகளாக இணையிலாத் தமிழ்ப் பணியாற்றியுள்ளார். அவர் விளம்பரத்தை விரும்பாமல் கடமையுணர்ச்சியுடன் பலருடைய அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்மதிப்பிற்கும் உரியவராக அரிய பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியிடத்து அளவிறந்த பற்றுப் பூண்டவர். எனினும் பிறமொழிகளைச் சிறிதும் வெறுப்பவரல்லர். இஃது இவரிடம் விளங்கும் மிகவும் போற்றத்தக்க அம்சம். அவர் தமக்காகவோ தம்மைச் சார்ந்தவருக்காகவோ என்பால் உதவி நாடி எந்த நாளும் வந்ததில்லை.”

என்னும் துணைவேந்தரின் உரை, இவர்தம் பெருமைக்குப் பெருமை சேர்க்கிறது.

பண்பு நலன்கள்

1. இறையுணர்வு மிக்கவர்-சைவரான இவர் தஞ்சை நாட்டு அன்னப்பன் பேட்டைத் திருமடத் தலைவராய் விளங்கிய சபாபதி தாயுமானவர் என்பவரிடம் சைவ சமய தீக்கை பெற்றுத் தாம் ஒர் உண்மைச் சைவர் என்பதை உ ண்மைப்படுத்தினார்.

2. செப்பறை அடிகளார் சிவஞான தேசிகர், திருமணம் செல்வகேசவ முதலியார் இவர்களைச் சிந்தை மறவாத தன்மையினால் குருபக்தி மிக்கவர் என்பது புலனாகிறது.

3. அன்னை சொர்ணம்மாள் பெயரில் பல்கலைக் கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியதால், தாயிடம் இவர் கொண்ட அன்பும் மதிப்பும் புலனாகின்றன.

சா—11