சான்றோர் பெருந்தகை மு.வ.
159
அமைதியாகக் கருத்துகளை எடுத்து மொழிவார். அவர்களுடைய சொற்பொழிவிற் கருத்தலைகள் வந்து போகும். நல்ல சிந்தனைச் சிற்பி. அவர்கள் வாழ்க்கையில் உணர்ச்சிக்கு அதிகம் இடம் கொடாமல் உண்மைக்கும் நடுவு நிலைமைக்கும், அறிவிற்கும் இடந்தந்து வாழ வேண்டும் என்பதனை அவர்கள் பெரிதும் வற்புறுத்துவார்கள். சுருங்கச் சொன்னால். அவர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் மன நலம் சேர்ப்பன வாகும். பொது மன்றங்களில் அமையும் இவர்தம் சொற் பொழிவுகளும் அவ்வாறே ஆரவாரத்திற்கிடமின்றி அமைதியுடன் கருத்தாழத்துடன் அறநெறியில் அமைந்து துலங்கக் காணலாம். 1953ஆம் ஆண்டு சென்னை-தேனாம்பேட்டை யில் நடைபெற்ற ஐந்தாம் தமிழ் விழாவின் போது இலக்கிய அரங்கிற்குத் தலைமை தாங்கிய இலங்கை அமைச்சர் திரு. நடேசப் பிள்ளை அவர்கள், இவர்களைத் ‘தமிழ்நாட்டின் இலக்கிய நோபெல் பரிசாளர்’ என்று அவையோருக்கு அறிமுகப்படுத்திய காட்சியும், அதுபொழுது இவர்கள் ‘செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி’ இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென, இல்லவர் அறிதல் அஞ்சி, மழலை மென்சொல் பயிற்றும் நாணுடை அரிவை என்ற அகநானுாற்றுத் தொடர்களை விளக்கிப் பேசிய இலக்கியப் பேச்சும், இன்றும் பலர் கண்களிலும் செவிகளிலும் நிறைந்துள்ளன. 1957ஆம் ஆண்டு கொண்டாடப் பெற்ற முதல் இந்தியச் சுதந்திரப்போர் நூற்றாண்டு விழாவில் சென்னை அரசு இயல்துறை வல்லுநரென இவர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டும் பரிசும் வழங்கியது.
நூற்பணி : நாவல்கள்
எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள டாக்டர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’