பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சான்றோர் பெருந்தகை மு.வ.

163

(Tagore). காண்டேகர் நூல்களை இவர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள்.

தம் காலில் விழுவதை விரும்பாத சுவாமிகளிடத்தில் இவருக்கு நிரம்ப மதிப்புண்டு, மெளன. சுவாமிகளிடம் இவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு மிகுதியாகும். அற்புதங் களை நம்பாத - இறைவன் படைப்பின் நோக்கத்தை உணர்ந்த - தொண்டின் வடிவமான- அறத்திற்கு- இறைவனின் அறச்சட்டத்திற்குப் புறம்போகாமல் மதித்து வாழ்கின்ற துறவிகள்-தொண்டர்கள் இவர்கள் வணங்கி வழிபடும் தெய்வங்களாவர்.

இயற்கையே தெய்வம்; இயற்கையே மருத்துவம்; இயற்கையே எளிமை; இயற்கையே குரு; இயற்கையே உபதேசம், இயற்கையே சமயம்; சமய நூலினும் இயற்கையே பெரிது என்ற கோட்பாட்டினைக் குறைவறக் கொண்டவர்கள் இவர்கள்.

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்களிடம் நெருங்கிய தொடர்பு கொண்டமைக்கு இவ் இயற்கைப் பற்றும் பெருங் காரணமாகும்.

இவர்கள் ஆத்திகர் நாத்திகர் என்று அவர்தம் போலி வேடம் கண்டு, இனங்காண்பதில்லை. அவரவர் தம் வாழ்வை வைத்தே ஆத்திகர் நாத்திகர் எனப்பிரிக்கலாம் என்பார்கள். இறைவனின் அறச்சட்டத்தை யார் உண்மையாக மதித்து நடக்கின்றார்களோ, அவர்களே உண்மையில் ஆத்திகர்கள் என்பது இவர்கள் கொண்டிருந்த கருத்தாகும்.

காந்தியடிகள் ‘கடவுள் உண்மை வடிவானவர்’ என்று கூறுவதைவிட ‘உண்மையே கடவுள்’ என்று கூறுவதைப் பெரிதும் விரும்பினாராம். அக்கருத்து - அக்காந்தியக் கருத்து - இவர்கட்குப் பெரிதும் உடன்பாடு.