பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா

15

களில் வந்துள்ள பொருள்களின் பெயர் அகராதி (Word–index) இருக்கும். ஆகையால் ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் இவருடைய பதிப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன.

உரைநடைப் பணி

தாம் பதிப்பித்த நூல்களின் முன்னுரையில் அந்நூலைப் பற்றிய சிறந்த செய்திகளை-ஆராய்ச்சி நலன்களை அழகுச் செவ்விகளைப் புலப்படுத்த எளிய இனிய உரைநடையினைக் கையாண்ட சாமிநாத ஐயர், விரிந்த அளவில் மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் முதலிய உரைநடை நூல்களை எழுதினார். மேலும் இவர் கோபாலகிருஷ்ண பாரதியார், வைத்தியனாதையர், கனம் கிருஷ்ணய்யர் முதலிய பெரியோர் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். ‘நல்லுரைக் கோவை’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தாங்கி நான்கு பகுதிகளாக வெளிவந்துள்ளது. ‘நினைவு மஞ்சரி’ இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை கொண்ட இரு தொகுதிகளாகும். ‘புதியதும் பழையதும்’, ‘கண்டதும் கேட்டதும்’ முதலியன நல்ல தமிழ் நூல்களாகும்.

சென்னை மாற்றம்

1903ஆம் ஆண்டு வரை குடந்தை அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் 1903ஆம் ஆண்டிலிருந்து 1919ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கொலு வீற்றிருந்தார். கல்லூரியில் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதோடு அமையாமல் வீட்டிலும் தம்மிடம் பயில வந்த மாணவர்களுக்கு இவர் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார். இவரிடம் பாடம் கேட்டவர்களில் வியாசபாரதத் தமிழ்மொழி