உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

சான்றோர் தமிழ்

வேண்டும்” என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராசனார்க்கோ அக்கருத்து இளமையிலேயே முகிழ்த்தது. “வாழ்க்கைக்குச் சமயம் தேவை, கடவுள் தேவை” என்று இளமை வரதராசனார் பேசினார், எழுதினார். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது.”

துணைவேந்தர் பணியும் இறுதியும்

பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பத்து ஆண்டுகள் பயனுறப் பணிகள் ஆற்றிய பெருந்தகை மு.வ. அவர்கள் 1974ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் நாளிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியினை ஏற்றுச் சிறக்கச் செய்தார், கட்டடங்கள் பல அவர்காலத்தில் கட்டப் பெற்றன. அஞ்சல்வழிக் கல்வித்துறை பிறர் வியக்கும் அளவிற்கு வளர்ந்தது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவராலும் ஒருங்கே பெருமதிப்பைப் பெற்றார். ஓயாத நிர்வாகப் பணிகளும் சிந்தனைப் போக்குகளும் எழுத்துத் தொழிலும் சான்றோர் மு.வ. அவர்கள் உடல் நலனுக்கு ஊறு செய்து வந்தன. 25-1-1974 அன்று மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாநாளன்று மு.வ. அவர்களுக்கு இருதய நோய் கண்டது. மதுரையிலிருந்து சென்னை வந்த அவர்கள் 10-10-1974 அன்று 5-30 மணிக்கு அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார்கள். தமிழர் நெஞ்சிருக்கும் வரை தமிழ்கூறு நல்லுலகிற்குத் தமிழ் நெஞ்சம் தந்த சான்றோர் பெருந்தகை மு.வ. அவர்களை நினைவிற் கொள்வர்.

— — —