பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

சான்றோர் தமிழ்

பெயர்ப்பு ஆசிரியர் ஆகிய மகோ மகோபாத்தியாய இராமானுஜாச்சாரியர், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான், துள்ளும் நடையில் நெஞ்சையள்ளும் காவடிச் சிந்து பாடிய சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் முக்கியமானவர்கள் ஆவர். இவரிடம் பயின்று ஆராய்ச்சி முறையைக் கற்றுக்கொண்ட பின்னர் நற்றிணையைப் பதிப்பித்தவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆவர். மற்றொருவர் இ. வை. அனந்தராம ஐயர் ஆவர். இவர் கலித்தொகையைப் பதிப்பித்தார்.

அண்ணாமலைப் பணி

1924 முதல் 1927 வரையில் செட்டி நாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி, அவர்கள் சிதம்பரத்தில் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் தலைவராகப் பணியாற்றினார்.

ஓய்வுக் காலப் பணி

பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி எழுதினார். தம் ஆசிரியராகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரத்தை இரண்டு பாகங்களில் விரிவாக எழுதி 1933, 1934 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார்.