பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

சான்றோர் தமிழ்

‘சதாபிடேக’ விழாவைக் கொண்டாடியது. அவருடைய 80ஆம் வயதில் குறுந்தொகைப் பதிப்பும் சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள், குமரகுருபரர் திரட்டு ஆகிய நூல்களும் வெளிவந்தன. ஐயரவர்கள் தம் வரலாற்றை ரசிகமணி டி.கே சி., கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன் முதலியோர் வேண்டுகோளின்படி ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் 1940 ஜனவரி முதல் எழுதத் தொடங்கித் தொடர்ந்து 122 அத்தியாயங்கள் எழுதி முடித்தார். 1942ஆம் ஆண்டு உலகப் பெரும்போர் நிகழ்ந்தபோது ஐயரவர்கள் தம் குடும்பத்துடன் திருக்கழுக்குன்றம் சென்று தங்கினார். அங்கே ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (1942) உலக வாழ்வை நீத்தார். இவர் இறக்கும்போது இவருக்கு வயது 86. 1948ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியில் இவர் முழு உருவச் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

பண்பு நலன்

ஐயரவர்கள் சிறந்த பண்புள்ளவர். தம்மிடம் பேசுபவர்களுடைய இயல்பு அறிந்து பேசும் இயல்பும், தம்மிடம் தமிழ் படிக்க வரும் மாணாக்கரிடம் நிறைந்த பேரார்வமும் கொண்டவர், மாணவர்களின் தகுதியறிந்து பாடம் சொல்லும் திறமை பெற்றவர். பல அவைகளுக்கு இவர் தலைமை தாங்கியிருக்கிறார்; சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். இவரோடு உரையாடும்போது பழஞ்செய்திகளையும் இலக்கியச் சுவை மலிந்த நூற்பகுதிகளையும் கேட்டு மகிழலாம். இவர் பேச்சில் நகைச்சுவை மிகுதியாக இருக்கும். தெளிவான நடை இவருக்குக் கைவந்த கலை. இவர் கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார். தேசியகவி சுப்பிர மணிய பாரதியார் இவரிடம் பெருமதிப்புக் கொண்டு மூன்று பாடல்களை இவர் குறித்துப் பாடியுள்ளார். அவற்றில் நம் நெஞ்சை மகிழ வைக்கும் பாடற்பகுதி வருமாறு :