பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சான்றோர் தமிழ்

பணிகள் மக்களால் அறியப்பட முடியாமல் உள்ளது. காரணம். அவர்தம் செந்தமிழ்ப் பணியினையும் மீறி அவர்தம் நாட்டுப் பணி ஒளிமிகுந்ததாய் உளது எனலாம். மேலும் பாரதியார்,

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் கோவதுவுங் காண்கிலையோ”

என்றும் பாடியுள்ளமை கொண்டு, வ. உ. சி.யைப் பற்றி எண்ணும்பொழுது பாரதியாருக்கு முதலில் நினைவிற்கு வருவது அவர்தம் அரசியல் தொண்டே எனலாம். இதனையே அவர் பிறிதோர் இடத்தில்,

‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னைெ ன மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!’

(பாரதியார் கவிதைகள் வ.உ. சிக்கு வாழ்த்து: பக். 82)

என்றும் பாடியுள்ளார்.

ஆயினுங்கூட அவராற்றிய செந்தமிழ்ப் பணிகள் நம் சிந்தை குடிகொள்ளத்தக்க சீரிய பணிகளேயாம் என்பது பின்வரும் சான்றுகளால் விளங்கும். வ.உ.சி. பிறந்த திருநெல்வேலிச் சீமை, இயல்பாகவே நாட்டுப் பற்றிற்கும் மொழிப்பற்றிற்கும் பிறப்பிடமாக என்றென்றும் விளங்கி வருவதோரிடமாகும். எனவே, தமிழ் மொழியினை விருப்போடும் ஆழமாகவும் இளமை தொட்டே பயின்ற