பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சான்றோர் தமிழ்

இன்பம் என்று நம்பியவர். எனவே. அறத்தின் ஆற்றலை அவனிக்கு உணர்த்த விரும்பி, ‘மெய் யுணர்வு’ என்னும் நூலினைக் கண்ணனூர்ச் சிறைவாசத்தின் போது எழுதினார். அறத்தின்பால் நெஞ்சம் நெகிழும் ஓர் ஆண்மகனை ஓர் ஆசிரியன் உருவாக்கும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது. நூறு வெண்பாக்கள் கொண்ட இந்நூலில் வ.உ.சி.யின் கவிதை நலமும் கருத்து வளமும் பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம். வைகறைப் போதில் ஒருவன் செய்யத்தக்க பணிகளாக இந்நூலில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு :

“வைகறையிற் கண்விழித்து மாசொழித்து மெய்யறங்கள்
கைவருதற் கீசனருள் கண்ணிமைப்பின் மையல்
அறுத்தற்கா நூனன்காய்ந்து யானை உர மெய்யிற்
செறுத்தற்கா நற்சிலம்பம் செய்.”

வைகறையில் துயிலெழுந்து, காலைக் கடன்களை முடித்து, ஈசனருள் பேணி, நன்னூல்களை ஆராய்ந்து கற்று, உடல் வலிமை பெறச் சிலம்பம் பயிலவேண்டும் என்று குறிப்பிடும் இவ் அரிய நூலிற்கு, அட்டாவதானம் கலியாண சுந்தர யதீந்திரர் என்னும் பெரியார் சிறப்புப் பாயிரமாம் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.

இவர் இயற்றியுள்ள சுய சரிதை நூல் இவர் நுண்மாண் நுழைபுலத்தினை விளக்கும். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் தேர்ச்சிபெற்ற வ.உ.சி. தம் முதல் மனைவி வள்ளியம்மை குறித்து எழுதுவன காண்க :

“என்னுடைய நேயர்களும் ஏழைபர தேசிகளும்
என்னுடைய வீடுவந்தால் ஏந்திழைதான்-தன்னுடைய
பெற்றோர்வந் தார்களெனப் பேணி உபசரிப்பாள்
கற்றோரும் உள்ளுவக்கக் கண்டு.”