பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

சான்றோர் தமிழ்

மட்டுமான உரையை-முதன் முதலில் பதிப்பித்த பெருமை வ.உ.சி.யைச் சேரும். அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்றே இவர் வழங்குவர். பரிமேலழகர் உரையோடு இவர் பலவிடங்களில் மாறுபட்டு நிற்கின்றார். மேலும், வ.உ.சி. அறத்துப்பாவின் சில பகுதிகளுக்குத் திண்மையாக உரை விளக்கம் கண்டுள்ளார். இவ்வுரை நயம் போற்றத் தக்கதாம். பாயிரம் திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்று இவர் முதல் முதலில் காரணங்காட்டித் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வ.உ.சி. அவர்கள் அரசியல் வானில் ஒளிவீசும் சுடர்த் தாரகையாகத் திகழும் அதே நேரத்தில் தமிழ் மொழிக்குத் தம் வாழ்நாள் முடியும் எல்லை வரையில் பல்வேறு துறைகளில் பாங்குற ஈடுபட்டு அயராது உழைத்த அறிஞர்-செந்தமிழ்ச் செம்மலார்-நூலோர் என்பது இது காறும் கூறியவாற்றான் தாமே போதரும்.