பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.3. தனித்தமிழ் இயக்கங் கண்ட
அடிகளார்

தமிழ் மலையென விளங்கியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாய் விளங்கி, மொழிக்கு வளம் சேர்த்தவர். தமது எழுத்தாலும் பேச்சாலும் சைவ சமயத்தின் பெருமைகளை நாடெங்கும் பரப்பியவர். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உரம் பாய்ந்த உடலும் உறுதி கொண்ட உள்ளமும் உடையவர். தமிழில் மட்டுமின்றி வடமொழி ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் புலமை நலம் சான்ற பெரியார் இவர். இவர்தம் எழுத்தும், பேச்சும், ஆய்வு நோக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் கிடைத்த அரிய செல்வங்களாகும்.

தோற்றம்

தஞ்சாவூர் மாவட்டம், நாகபட்டினத்திற்கு அருகில் இரண்டு கல் தொலைவில் உள்ள காடம்பாடி என்ற ஊரில் 18-7-1879ஆம் ஆண்டு, சொக்கநாதப்பிள்ளை சின்னம்மை ஆகியவர்களுக்கு மகனாகத் தோன்றினார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் வேதாசலம் என்பதாகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததன் காரணமாக இவர் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். சூரிய நாராயண சாஸ்திரியார் ‘பரிதிமாற் கலைஞன்’ ஆனது போல, சுவாமி வேதாசலம் ‘மறைமலையடிகள்’ ஆனார்.