பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனித்தமிழ் இயக்கம் கண்ட அடிகளார்

39

எழுதினார். அடிகளாரின் ஆய்வுரையைக் கண்ட மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்து தம் செலவிலே அச்சிட்டுத்தர வேண்டி அதற்குரிய பொருளையும் திரட்டித் தந்தனர். இவ்வாறு மாணவர்களின் மனங் கொள்ளத்தக்க பேராசிரியராக அடிகள் விளங்கினார்.

27-6-1898இல் அடிகளாருக்குக் கொடிய நோய் ஒன்று, கண்டது. அதனைத் தீர்க்குமாறு திருவொற்றியூர் முருகனை அடிகள் வேண்டிக் கொண்டார். நோய் நீங்கியபின் முருகனை நினைத்து “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை” என்னும் அருள்நூலைப் பாடினார். சங்கப் பனுவல்களின் கருத்தும், நடையும் பொலிந்து விளங்கும் சிறந்த நூல் இது. தமக்குச் சைவ சித்தாந்த நூல்களை விளக்கிப் பாடம் சொன்ன சோமசுந்தர நாயகர் (22-2-1901) இயற்கை யெய்திய பொழுது. அவர் பிரிவு பொறாது “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்” என்னும் நூலை எழுதினார். அந் நூலில் தாமும் சைவவுலகும் அடைந்த துன்பத்தினைக் ‘கையறுநிலை’ ‘மன்னைக் காஞ்சி’யென்னும் பிரிவுகளாகவும், நாயகரின் வாழ்க்கைத் துணைவியார் பேதுற்ற நிலையினைத் ‘தாபத நிலையாகவும்’ அமைத்துள்ளார்.


சொற்பொழிவாளர்

கவின்மிகு கட்டுரையாற்றல் கைவரப்பெற்ற அடிகள், சுந்தரத் தமிழில் சொற்பெருக்காற்றும் வல்லமையும் பெற்றிருந்தார். அடிகளாரின் பேச்சு அனைவரையும் காந்தம் போல் ஈர்க்கும் சக்தி உடையது. பெரும் பொருள் செலவுசெய்தும் அடிகளாரின் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூடினர். பேசுவதில் சில நெறிகளைப் பின்பற்றியவர் அடிகள். தாம் பேச எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகவும், ஆழமாகவும். அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லும்