பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சான்றோர் தமிழ்

குழந்தைத் தோழர்கள்

குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பகவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது,

குத்திச் சண்டை செய்யவோ?
குப்பை கிண்டி மேயவோ?
கத்திபோல் உன் கால் விரல்
கடவுள் தந்து விட்டனர்!


காலை கூவி எங்களைக்
கட்டில் விட்டெ ழுப்புவாய்,
வேலை செய்ய ஏவுவாய்;
வெற்றி கொண்ட கோழியே!

என்று பாடியுள்ள திறம் மகிழ்தற்குரியது. பெட்டைக் கோழியைப் பற்றிப் பாடும் பாடலில் கவிஞரின் கழிவிரக்கப் பண்பு புலனாகக் காணலாம். ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. இம்முறையில் பெட்டைக்கோழியை அடைக்கும்பொழுது கூரையை விட்டு இறங்கிவரச் சொல்லி; பிள்ளைகளையும் கூட்டிவரச் சொல்லிக் கொத்திக் கொத்தித் தின்னக் குட்டை நெல்லைக் காட்டும் இரக்கம் மனம் கொளத் தக்கதாகும். சின்னக் குழந்தைகள் நெஞ்சத்தில் எளிய உயிர்களுக்கும் இரங்கும் அரிய கருணை உள்ளத்தினை இப்பாடல்களில் புகட்டி நிற்கக் காண்கின்றோம்.