பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சான்றோர் தமிழ்

வில்லியம் பிளேக் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலைக் குழந்தைகளுக்காகத் தமிழில் மொழி பெயர்த்த பொழுது,

கூட்டில் அடைத்திடினும்-இரையினைக்
கொண்டு கொடுத்திடினும்,
காட்டில் வளர்ந்த குணம்-புலிகளும்
காட்டா திருக்கு மோடி?

மானைப் படைத்த தெய்வம்-புலியையும்
வளர்த்து விடலா மோடி..?
தேனைப் பழித்த சொல்லாய்!-எனக்குநீ
தெரிந்துரை செய்யா யோடி?

என்ற பாடல்களில் எண்ணத்தை வளர்க்கும் இனிய வினாக்களை எழுப்பியுள்ளார்.

வெண்ணிலாப் பாட்டு

‘நிலா நிலா வா வா’ என்று குழந்தைகள் பாடி மகிழ்வது இயற்கை. இம்முறையில் சந்திரன் என்ற தலைப்பில் கவிமணி பாடியுள்ள பாடலில் பல சிறப்புகளைக் காணலாம். இந்தப் பாடலில் காட்சி இன்பமும் கருத்து இன்பமும் காந்தியக் கருத்தும் அழகுறப் பொருந்தி உள்ளதனைக் காணலாம்.

காட்சி வருணனை

மீனினம் ஓடிப் பரக்குதம்மா!-ஊடே
வெள்ளி ஒடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறு தம்மா?-இந்த
மாட்சியி லுள்ளம் முழுகு தம்மா!