உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சான்றோர் தமிழ்

போன்றவர்; காடு முரடு, உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவிமணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை;”[1] இது ஓரளவு உண்மைதான்.

மேற்காட்டிய பகுதிகள் கவிமணியின் தேசியப் பற்றை உணர்த்தும். ‘தாயிற் சிறந்ததப்பா பிறந்த தாய் நாடு’ என்று தாய்நாட்டுப் பற்றை ஊட்டி, “பேணி நம் சந்தத் தமிழ் வளர்ப்போம், தாய் நாட்டுக்கே உழைப்போம்” என்று. தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் விளக்கி, ‘காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய்வோம்’ என்று சொல்லி, பாரில் உயர்ந்த இமயமலையையும், அதன் சிகரத்தில் பறக்கும் தேசக் கொடியையும் காட்டி,

மானம் உருவாக வந்தகொடி - இதை
மாசுறச் செய்வது பாவம், பாவம்!
ஊனில் உயிருள்ள கால மல்லாம்-மிக
ஊக்கமாய் கின்று.நாம் காத்திடுவோம்

என்று நாட்டுப் பற்றுணர்வோடு நவில்கின்றார். ‘உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய் நெஞ்சே தினம்’ என்று காந்தியடிகளைப் போற்றுகின்றார். இறுதியில், உலகமெல்லாம் ஒரு குடும்ப மாக வாழ வேண்டும் என்பதனை,

உலக மக்களெலாம்-அன்போடு
ஒரு தாய் மக்களைப் போல்
கலகமின்றி வாழும்-காலம்
காண வேண்டுமப்பா!

என்ற பாடலில் கவிமணி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.


  1. பி ஸ்ரீ. நானறிந்த தமிழ் மணிகள் ப. 52.