பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி

69

கவிமணியின் கதர்ப்பற்றும் காந்தியப்பற்றும் நாடு அறிந்தவை.

முடிவுரை

கவிமணி குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்,குழந்தைகளின் பேச்சில் மகிழ்பவர், அவர்களோடு உரையாட விரும்புவர்.

“அவர்(கவிமணி) குழந்தைகளின் மனத்தை நங்கு அறிந்தவர்; குழந்தைகளோடு இனிமையாகப் பேசுவதில் ஆசை உடையவர்; குழந்தைகளுடைய பேச்சையும் அவற்றின் இடையிடயே தோன்றும் பளிச்சென்று தோன்றும் உவமைகளையும் எண்ணி மகிழ்பவர்.”[1] இவ்வாறு திரு.பெ.நா. அப்புசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

‘கவிமணி’ என்னும் பட்டம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்களால் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களால் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தரப்பட்டது. கவிமணி என்ற தம் பெயருக்கு ஏற்ப நல்ல கவித்துவத்தோடு மணியான கவிதைகளைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்காக வழங்கிய பெருமை தேசிக விநாயகம் பிள்ளையைச் சாரும். பாரதியார் முப்பெரும் பாடல்வழி எப்போதும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவது போல, கவிமணி அவர்களும் தாம் இயற்றிய குழந்தை பாடல்களால் தமிழ்கூறு நல்லுலகத்தால் என்றென்றும் நினைவுகூரப் பெறுவர் என்பது உறுதி.


  1. சுடர்: கவிமணி மலர். 1965, தில்லித் தமிழ்ச் சங்கம்-ப.49