பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர்

73

ளாகவே மலர்ந்துள்ளன. அவை 1. வேளிர் வரலாறு, 2. சேரன் செங்குட்டுவன், 3. ஆழ்வார்கள் காலநிலை, 4. சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்பன.

மு. இராகவையங்கார் அவர்களின் ஆராய்ச்சி நூல் நிரலில் முதல் இடம் பெறுவது ‘வேளிர் வரலாறு’ என்பது. இந்நூல் 1905ஆம் ஆண்டில் வெளியிடப் பெற்றது. மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் வடிவம் இந்நூல். இந்நூல் ‘செந்தமிழ்’ இதழிலும் வெளி வந்துள்ளது, வேளிர் என்ற சொல் வேளாளர் என்ற தனிப்பட்ட ஓர் இனத்தவரைக் குறிக்கிறது என்று சுட்டி, அவ் வினத்தவரின் வரலாறாக நச்சினார்க்கினியர் கூறிய செய்திகளைப் பிற இலக்கிய சாசனச் சான்றுகளுடன் உறுதிப்படுத்தி, இவ்வினத்தவர் தமிழகத்தில் குடியேறிய காலம் கி. பி. பத்தாம் நூற்றாண்டு என்று வரையறை செய்கின்றது.

அடுத்து 1915ல் வெளிவந்த ‘சேரன் செங்குட்டுவன்’ என்ற நூல் செங்குட்டுவனின் வரலாற்றை ஆய்வது. செங்குட்டுவனைப் பற்றிய பல்வேறு செய்திகளும் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு இவற்றின் அடிப்படையில் விளக்கம் பெறுகின்றன. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை இனிய உரைநடையில் விளக்கும் இந்நூல், இவர்தம் புலமைத் திறத்திற்கும் ஆராய்ச்சி வன்மைக்கும் தக்கதோர் காட்டாகும்.

1926ஆம் ஆண்டில் தமிழ் உலகத்தில் உலா வந்தது ‘ஆழ்வார்கள் கால நிலை’ என்ற நூல். ஈரோட்டு இலக்கியச் சங்கத்தில் எச்.ஏ. பாப்லி துரையின் அழைப்பின் பேரில் ஆற்றிய ஆராய்ச்சி உரையின் வடிவமே இந்நூல்.

சா–6