பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சான்றோர் தமிழ்

ஆழ்வார்கள் பாடல்களில் அருகிக் காணப்படும் சில செய்திகளைக் கொண்டு பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கி ஆழ்வார்களின் காலநிலை வரையறுக்கப்படுகின்றது.

அடுத்ததாக 1929ஆம் ஆண்டில் வெளிவந்த சாசனத் தமிழ்க்கவி சரிதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பற்றி ஆற்றிய உரையின் வடிவம். இதில் எண்பதுக்கும் மேற்பட்ட புலவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இலக்கியச் சான்றுகளுடனும், சாசனச் சான்றுகளுடனும் மொழியப்படுகின்றன. சேனாவரையரும் பரிமேலழகரும் சமகாலத்தவர் என்பதை இந்நூலில் இவர் தெளிவுபடுத்துகின்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய சொற் பொழிவின் எஞ்சிய பகுதி ‘இலக்கிய சாசன வழக்காறுகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றது. இஃது இவர் மறைவுக்குப்பின் வெளிவந்த நூலாகும்; அரசர், தலைவர் வழக்குகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இது சென்னை அரசாங்கப் புத்தக வெளியீட்டுக் குழுவினரால் வெளியிடப் பெற்றது. கல்வெட்டுகளும், இலக்கியங்களும் தமிழிலக்கியக் காலப் பரப்பை ஆராய்வதற்கு உதவி புரிவதை இந்நூல் தெளிவாக்குகிறது. ஆழ்வார் நாயன்மார் பாடல் களில் இடம்பெறும் சொல் வழக்குகள் சாசனங்களில் பயிலு மாற்றை இந்நூல் விளக்கம் செய்கிறது.

இலக்கிய ஆராய்ச்சி

இலக்கிய ஆராய்ச்சியாக மலர்ந்த நூல்கள் பல. 1938ஆம் ஆண்டில் பேராசிரியரின் மணிவிழா நினைவாக ‘ஆராய்ச்சித் தொகுதி’ என்ற நூல் வெளிவந்தது. முப்பத்தைந்து கட்டுரைகள் இந்நூலின்கண் இடம் பெற்றுள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் . பலவற்றின் தொகுப்பு நூல் இது.