பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

சான்றோர் தமிழ்

தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மி கரம் விளங்கியது.’

(என் சரித்திரம். பக்கம் : 4)

என்று கூறியுள்ளார்.

இளமையும் கல்வியும்

உத்தமதானபுரம் இரண்டே தெருக்களைக் கொண்ட சிற்றூராகும். அவ்வூரில் 19-2-1855ஆம் ஆண்டு சாமிநாத ஐயர் அவர்கள் சங்கீத வித்துவானான வேங்கடசுப்ப ஐயருக்கும் சரசுவதி அம்மையாருக்கும் முதல் மகனாகத் தோன்றினார். இளமையில் அவர் பெற்றோர் வறுமையில் பெரிதும் துன்புற்றிருந்தனர். ஏறத்தாழ ஆண்டுக்கு 50 ரூபாய் தான் அவர்களுக்கு வருமானமாக வந்தது. உடையார் பாளையம் அரண்மனையின் ஜமீன்தார் ஆதரவு ஓரளவு இக்குடும்ப வாழ்க்கையை நடத்திவரத் துணை செய்தது. சாமிநாதன் என்று குழந்தைக்குப் பெயரிட்டுச் செல்லமாக ‘சாமா’ என்று அழைத்து வந்தனர். வேங்கடராமன் என்ற பெயர் சாமிநாத ஐயருக்கு வழங்கி வந்தது. காரணம் திருப்பதி வேங்கடாசலபதி அவர்களுடைய குலதெய்வம். தந்தையார் வேங்கடசுப்ப ஐயர் சங்கீத வித்துவானான காரணத்தினால் ஆங்காங்கு சங்கீதத்தோடு கூடிய கதா காலட்சேபம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இதன் காரணமாக ஊர்விட்டு ஊர் சென்று பிழைக்கும் வாழ்வே அவருக்கு அமைந்தது. வருங்காலத்தில் தம்முடைய மகனும் ஒரு சங்கீத வித்துவானாக வரவேண்டுமென்றே எண்ணினார். ஆனால் சாமிநாத ஐயருக்குச் சங்கீதமும் சமஸ்கிருதமும் அவ்வளவாக வரவில்லை. தமிழே அவர் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து அவர் உள்ளத்தில் நிலையாகக் குடிகொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சான்றோர்_தமிழ்.pdf/8&oldid=1007344" இலிருந்து மீள்விக்கப்பட்டது