பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சான்றோர் தமிழ்

பொதுக்கூட்டத்தில் பேசச் செய்ததோடு, அவர்தம் பேச்சையும் நாவலர் தமிழில் மொழிபெயர்த்தார். சைமன் கமிஷனை எதிர்த்து 1930ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நாடெங்கும் நடைபெற்ற ‘உரிமை நோக்க நாள்’ பின்னாளில் சட்ட எதிர்ப்பு இயக்கத்திற்கும், உப்புச் சத்தியாகிரகத்திற்கும் வழி வகுத்தது. இதன் விளைவாகத் தலைவர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டனர். நாடெங்கும் நடந்த இக் கிளர்ச்சிக்குப் பணம் தேவைப்பட்டது. தென்னாட்டில் ஒரு திரளான நன்கொடை திரட்டித் தந்தவர்களில் நாவலர் குறிப்பிடத்தக்கவராவர். இம்மட்டோடன்றித் தாமும் தம் வருவாயிலிருந்து திங்கள்தோறும் நூறு ரூபாய் நன்கொடை அனுப்பி உதவினார். மேலும் நாவலர் குடும்பமே நாட்டுப் பணியில் தலைநின்றது எனலாம். காரணம் நாவலர் தம் இரண்டாவது மகன் இலட்சுமிரதன் பாரதி, மகள் இலக்குமி பாரதி, மருகர் கிருட்டிணசாமி பாரதி ஆகிய மூவரையும் காங்கிரஸ் தொண்டர்களாக்கி. அவர்கள் முயற்சிகளுக்கும் செயல்களுக்கும் பக்கபலமாக இருந்தார்.

தீண்டாமை ஒழிப்பு

“தாழ்த்தப்பட்டோருக்குத் திருக்கோயிலில் நுழையும் உரிமை இல்லை” எனும் இழிநிலையை எதிர்த்துக் காந்தியடி கள் 1933 மேத் திங்கள் 3ஆம் நாள் உண்ணா நோன்பு தொடங்கினார். இருபத்தொரு நாள்கள் நீடித்த இவ் வுண் ணா நோன்பின் விளைவாக அண்ணல் காந்தியடிகளால் அரிசனங்கள் என்று அன்புடன் அழைக்கப்பெற்ற மக்கள் கோயில் உள் நுழையும் உரிமை கோரினர். இயல்பிலேயே தாழ்த்தப்பட்டோரிடம் தாயன்பும் தனியன்பும் காட்டி வந்த நாவலர் அவர்கள் மாடமதுரையில் கோயில் நுழைவு இயக்கத் தைத் தொடங்கி, மதுரை மாவட்டத்தின் திண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் முதல் தலைவராக விளங்கினார்.