பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
சாயங்கால மேகங்கள்
 

தான் செய்ய விரும்புகிற தவறுகளைத் தன்னோடு சேர்ந்து சுலபமாக இசைந்து இணங்கி அங்கீகரிக்கும் சிலரைச் சந்தித்துப் பேசும் ஏற்பாடாகவே அவர் அதைச் செய்திருந்தார். அங்கு யாரும் எதைப் பற்றியுமே சீரியஸ்ஸாக இல்லை என்பது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது. சினிமா என்னும் கனவுலகத்தைச் சேர்ந்த அந்த மனிதர்கள் நேரத்தையும், பணத்தையும் தாராளமாக வீணாக்கினார்கள்.

அங்கே வந்திருந்த ஒரு துணை நடிகை எப்போதோ தன்னுடைய ஆட்டோவில் ஏறிப் பிரயாணம் செய்திருக்க வேண்டுமென்று பூமிக்குத் தோன்றியது. அதனால் தன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று அவள் வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் அநுமானித்தான்.

“அப்ப நீங்க ஹீரோவுக்குத் தோழனாக வந்து கராத்தே திறமையைக் காட்டறதாகவே வச்சுக்கலாம்"என்று இரண்டு மணி நேரத்துக்குப் பின் மெல்ல ஆரம்பித்தார் கனகசுந்தரம்.

‘அதுதான் நம்பர் ஒன் ஐடியா’ என்று எல்லாரும் உடனே ஒத்துப் பாடினார்கள், மறுபடி சாப்பிட்டார்கள். மறுபடி அரட்டையடித்தார்கள்.

பூமி தனக்கு வேலை இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். கலை கத்திரி காய் என்ற பேரில் வீணில் உண்டுகளித்திருப்போர் கூட்டமாக இருந்தது அது. அவர்களில் யாருக்கும் பணம் பண்ணுவதையும், செலவழிப்பதையும் தவிர வேறு வாழ்க்கை இருப்பதாகத் தெரிய வில்லை. அதுவும் சுலபமாக உழைக்காமல் பணம் பண்ண விரும்பினார்கள். சுலபமாகச் செலவழிக்க விரும்பினார்கள். நோக்கமோ கொள்கையோ இல்லாத சுய நல லாப வேட்டைக்காரர்களாக இருந்த அவர்களிடம் இருந்து - விடுபட்டு விலகி வெளியேறினால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

“என்னங்க? அதுக்குள்ளார இப்பிடி அவசரப்படறீங்களே? இன்னும் டிஸ்கஷனே ஆரம்பிக்கலியே?” என்று