உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சாயங்கால மேகங்கள்

யாராவது எழுந்திருந்து வடைக்கு அரைத்தாக வேண்டும். அந்த அவசரத்தில் வேறு புது ஆள் யாரையும் தேட முடியாமலிருந்தது. சித்ரா அன்றிரவு அங்கேயே தங்கினாள். பூமி குபேராவிலிருந்து திரும்பியதும் அவனுக்கு இந்தத் தகவல் தெரிந்தது.

அந்த நேரத்துக்கு மேல் வேறு எங்கேயும் எடுத்துப் போய் அரைத்து வரவும் முடியாமல் இருந்தது. வடைக்கு அந்த மெஸ் பெயர் பெற்றது. மசால்வடையும், உளுந்து வடையும் இல்லாவிட்டால், பல டிரைவர்களுக்குக் காலைச் சிற்றுண்டியே உள்ளே இறங்காது. முத்தக்காள் மெஸ்வடை என்று நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்து உட்காருவார்கள். அரை டஜன் வடை, ஒரு டஜன் வடை என்று பார்ஸல்களே நிறையப்போகும். மெஸ்ஸில் வடை கிடைக்கவில்லை என்று கெட்ட பேர் ஆகிவிடக் கூடாது.

அதிகாலை நாலு மணிக்கு ஆட்டு உரலில் கடமுட ஓசை கேட்டுச் சித்ராவும் முத்தக்காளும் எழுந்து வந்து பார்த்தால் முண்டா பனியனும் வேஷ்டியுமாகப் பூமியே உட்கார்ந்து மாவாட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன தம்பி இது நீங்களே ...”

“காரியம் நடந்தாகணும் முத்தக்கா! என்ன ஏதுன்னு பார்த்துத் தயங்கிக் கொண்டிருக்க இது நேரமில்லை.”

“நானும் அக்காவும் மாத்தி மாத்தி அரைத்துக் கொடுத்திடலாம்னு திட்டம் போட்டிருந்தோம்."-- சித்ரா

“உங்களாலே இந்தக் குழவியை அசைக்கக் கூட முடியாது”

பூமி கூறியது உண்மைதான். பழங்காலத்து இராட்சத உரல் அது. தொழில் ரீதியாக மாவரைப்பவர்கள்தான் அதை அசைத்து வேலை செய்ய முடியும், அல்லது பூமியைப் போல் தசையை இறுக்கி வலிமையாக்கிக் கொண்டவர்களால்தான் முடியும்