உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூமி மிகவும் சுலபமாகவே அதை செய்து கொண்டிருந்தான். ‘அழுக்கு படாமல் நாற்காலியில் உட்காருவது தான் அந்தஸ்து என்றும் கைவருந்த உழைப்பது கேவலம் என்றும் இளைஞர்கள் நினைத்து முடங்கிக் கிடக்கும் அளவு இன்றைய கல்வி அவர்களைக் பலவீனப் படுத்தியிருக்கிறது.’ பூமி ஆரம்பத்திலிருந்தே இந்த பலவீனத்தில் சிக்கியதில்லை. சிங்கப்பூரில் சீனர்கள் ஆண்களும், பெண்களுமாகக் கடின உழைப்பு உழைப்பதைப் பார்த்து வரழ்வைக் கற்றுக் கொண்டவன் அவன். உழைப்பில் எதுவுமே கேவலமில்லை. உழைக்காமல் இருப்பதிலோ எல்லாமே கேவலம்தான்.

படித்துப் பட்டம் பெற்றிருந்தும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டத் துணிந்திருந்தான் அவன். இன்று ஒரு சவாலை நிறைவேற்றிக் காட்டுவதற்காக இந்த மெஸ்ஸை ஏற்று நடத்திக் கொண்டிருந்தான். வேர்வை மின்னிடத் தசைகள் ஏறி இறங்கிப் புடைத்துத் தணிய அவன் மாவாட்டிக் கொண்டிருந்தபோது சித்ரா --பாத்திரத்தோடு ஆட்டிய மாவை அள்ளிக் கொண்டு போக அங்கே வந்தாள்.

“நேத்துப் போனீங்களே என்ன ஆச்சு? அந்தச் சினிமாகாரர் எதுக்குக் கூப்பிட்டாராம்?”

“நான் கராத்தே சண்டை போடுவேன் என்று யாரோ சொன்னார்களாம். அதனாலே கராத்தே அடிபிடி சண்டை எல்லாம் வருகிற மாதிரி ஒரு சினிமாவிலே நடிக்க வரமுடியுமா என்று கேட்டார். இப்பொழுது மாவாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் மாவாட்டுகிற மாதிரி ஒரு சினிமாவிலே நடிக்க முடியுமா என்றுகூட வந்து கேட்பார்.

சித்ரா இதைக் கேட்டு நகைத்தாள். வெளியே பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. முதல் வியாபாரத் தேவைக்காக இரண்டு வகை வடைக்குமாகக் கொஞ்சம் மாவை அரைத்துக் கொடுத்து விட்டு மீதியை அரைத்துக் கொண்டிருந்தான் பூமி.

வழக்கமாக அந்த வேளையில் --அவன் பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.